இலங்கை முஸ்லிம்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அறிவுரைப்படி திங்கட்கிழமை புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசயில் தலைவர்கள் வாழ்துச் செய்திகளை தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ
இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களிப்பு செய்துள்ளனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இலங்கை முஸ்லிம்கள் இன்று நாடெங்கிலும் தங்களது சமய நம்பிக்கைகளையும் வணக்க வழிபாடுகளையும் சுதந்திரமாக மேற்கொள்கின்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் எமது தாய்நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த பயங்கரவாத இருள் சூழ்ந்த யுகத்திலிருந்து நாம் தற் போது விடுபட்டுள்ளோம். ஈதுல் அல்ஹா உணர்த்தி நிற்கும் தியாக உணர்வு எல்லா சமூகங்களினால் மிகுந்த தியாகத்துடன் வெற்றி கொள்ளப்பட்ட சுதந்திரத்தைப் போற்றிப் பேண அவர்களுக்கு உதவும்.
இந்த முக்கியமான பெருநாள் தினத்தை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், கொண்டாடுவதற்கும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எனது நல்வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தி. மு. ஜயரத்ன
ஹஜ் கடமை உணர்த்தும் பாடமானது ஒரு நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு பெரும் துணையாக அமைகின்றது என பிரதமர் தி. மு. ஜயரத்ன ஹஜ் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களுக்குச் சுதந்திரமாக ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட முடியுமாக இருக்கின்றது. பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழித்தமையினால் தான் அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சமாதான சூழலில் அபிவிருத்தி இலக்கினை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் இந்தத் தருணத்தில் இலங்கையினுள் மதரீதியான ஒற்றுமையையும் அதற்குத் தேவையான சமூகப் பின்னணியையும் கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும் என நான் நம்புகின்றேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நோக்கமும் சர்வ மதங்களைச் சேர்ந்தவர்களினதும் ஒற்றுமை யினூடாக நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதாகும். அதனை இவ் வகையான சமயக் கொண்டாட்டங்களின் ஊடாக எடுத்துக்காட்ட வேண்டும். அதன்படி இந்த உன்னத ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மத மற்றும் இன நற்புணர்வு மூலம் இந்த நாட்டை அபி விருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு நாம் உறுதி பூணுவோம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம்
இஸ்லாம் வலியுறுத்தும் தியாக சிந்தையையும் சகிப்புத்தன்மையையும் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை ‘ஈதுல் அழ்ஹா’ பெருநாள் சிறப்பாக உணர்த்துகின்றது. இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ‘ஈதுல் அழ்ஹா’ தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கையில் யுத்தம் ஓய்ந்து, சமாதானம் நிலவும் காலத்தில் இன்னுமொரு பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.உலகளாவிய முஸ்லிம் சமுதாயம் பல்வேறு நாடுகளில் சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் மத்தியில் இந்தப் பெருநாளையும் சந்திக்கின்றது. இலங்கை முஸ்லிம்களும் அவற்றிற்கு விதி விலக் கானவர்கள் அல்லர். இந்நாட்டு முஸ்லிம்களில் கணிசமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இடம்பெயர்ந்து அகதிகளாகவும் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி மீள்குடியேறியும் வாழும் முஸ்லிம்களின் நிலைமையும் பரிதாபகரமானது. இவ்வாறான சூழ்நிலையில் அவர்களது விடிவுக்காகவும், விமோசனத்திற்காகவும் தியாக சிந்தையோடு நாம் செயலாற்ற வேண்டும். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ் யாத்திரை சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவத்தின் மகிமையை நன்கு பிரதிபலிக்கின்ற அதே வேளையில், உறுதியான சமூகக் கட்டமைப்பின் வலிமையையும் எடுத்துக் காட்டுகின்றது. நபி இப்ராஹீம் (அலை), நபி இஸ் மாயில் (அலை) ஆகியோரின் உன்னதமான தியாகத்தையும், சகிப்புத்தன்மையையும் பின்பற்றி ஒழுக இந் நன்னாளில் திடசங்கற்பம் பூணுவோமாக! என்று உள்ளது.
ஏ.எச்.எம். பெளஸி
புனித ஹஜ் பெருநாளில் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் அனைவரும் கண்ணியமும் கெளரவமும் நிறைந்த மக்களாக மகிழ்ச்சியாக வாழக்கூடிய நிரந்தர சமாதானச் சூழலும் செல்வச்செழுமையும் மிக்க நாடாக எமது நாட்டை ஆக்கித் தருமாறு அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்று தசாப்தங்களின் பின்னர், நாம் இன்று அமைதிக் காற்றை சுதந்திரமாகச் சுவாசிக்க முடியுமாயுள்ளதோடு எமது தாயகமான இலங்கை ஆசியாவிலே ஆச்சரியமான நாடாக ஆக்கும் இலக்கினை நோக்கிய நாட்டில் சமாதானம் நிலைபெற இறைவனைப் பிரார்த்திப்போம். இவ்வாறு சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment