
கொழும்பு நகரின் துரித அபிவிருத்தித் திட்ட செயலாக்கத்தின்போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக சிறிலங்காவின் கல்வியாளர்கள் குழுவான Friday Forum அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு, அமைதி மற்றும் சமாதானத்திற்கான பங்களிப்பு, ஜனநாயகம், நல்லாட்சி, சமூக நீதி போன்றவற்றை கவனத்தில் கொள்ளவும், ஆலோசனை வழங்கவும் உருவாக்கப்பட்டது.
இவ்வமைப்பு தற்போது கொழும்பு நகர அபிவிருத்தி என்னும் பெயரால் வாழ்வாதாரத்திற்கான சிறுதொழில்களில் ஈடுபடும் மக்கள் துன்புறுத்தப்படுவதாக கவலை தெரிவித்துள்ளது. "சட்ட ரீதியான உரிமங்களைப் பெற்றவர்கள் மற்றும் தொடர்ச்சியாக பல காலங்களாக ஒரே இடத்தில் வாழும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள், தமது சொந்த வீடுகள் மற்றும் தொழிலிடங்களிலிருந்து விரட்டப்படுகிறார்கள். இதனால் இடப்பெயர்வுக்கும், வாழ்வாதார இழப்புக்கும் காரணமாக அமைவதுடன், குறிப்பாக குறைந்த வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் குடிசைவாழ் மக்கள் போன்றவர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நடைபாதை வியாபாரிகள் மற்றும் சிறியளவிலான வியாபாரிகள் போன்றோர் அவர்களது இடங்களை விட்டு அப்புறப்படுத்தப்படுவதால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என மூத்த இராஜதந்திரியாகக் கடமையாற்றியவரும் தற்போது Friday Forum ஐத் தலைமை தாங்கி வழி நடாத்துபவருமான ஜயந்த தனபால தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலரான கோத்தபாய ராஜபக்சாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையாலேயே துரித நவீன நகரமயமாக்கல் திட்டமும், நகர அபிவிருத்தி திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன.
துரிதப்படுத்தப்படும் கொழும்பு நகர அபிவிருத்தியால் தெருவோர சிறுதொழில்களை நம்பி வாழும் இளந்தலைமுறையினர் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என இந்த அமைப்பு மேலும் எச்சரித்துள்ளது. " குறைந்த வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் குடும்பங்களைச் சேர்ந்த எத்தனையோ சிறார்கள் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர வைக்கப்பட்டதனால் தொடர்ந்த நல்ல முறையில் கற்றுவந்த அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்து உள்ளார்கள்" என சமூக ஆர்வலர்கள், சட்டவாளர்கள் மற்றும் புலமையாளர்கள் எனப் பலரை உள்ளடக்கியுள்ள Friday Forum என்ற இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்ட வரைபுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைவாக இவ்வாறான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ள இந்த அமைப்பானது, "சமூகத்தைப் பாதிக்கும் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறும் சமூக நீதிக்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்" என மேலும் தெரிவித்துள்ளது. வாழ்வாதார உரிமை, தனிநபருக்கான பாதுகாப்பு உரிமை, உறைவிட உரிமை போன்றவற்றை உள்ளடக்கிய அனைத்துலக மனித உரிமை நியமங்களை சிறிலங்கா அரசு கடைப்பிடிக்க வேண்டுமென்பதை கூட்டிக்காட்டியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கும் அவர்களது தனிப்பட்ட சொத்துக்களுக்கும் இச்செயல்களுடன் தொடர்புபட்ட அதிகாரிகளே பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்களின் இயல்பு வாழ்வைக் குலைக்கும் இந்த நடவடிக்கையில் பாதுகாப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். "நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிகளுக்காக சீருடைகள் தரித்த இராணுவ வீரர்கள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது இராணுவத்தினரின் பணிகள் அல்ல" எனவும் இந்த அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
News:Yarlmuslim



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment