Tuesday, May 31, 2011

முஷாரப்பிற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெற்றது அமெரிக்க நிர்வாகம்

Best Blogger Tips
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு மற்றும் அந்தஸ்தை அமெரிக்க நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு போதுமான பாதுகாப்பை முஷாரப் அரசு வழங்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக் குழு ஒன்று குற்றம்சாட்டியதையடுத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனினும் அல்கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து முஷாரபின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதால் பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அவருக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவில் முஷாரப் சாதாரண குடிமகனைப் போன்று நடத்தப்படுவார். விமானநிலையங்களில் குடியேற்ற கருமபீடத்தில் அவர் வரிசையில் நிற்க வேண்டும். அவரிடம் உடல் முழுவதும் சோதனை நடத்தப்படும் என வாஷிங்டனில் உள்ள தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தனியார் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலத்தில் அமெரிக்க விமானநிலையங்களில் முஷாரப் வந்திறங்கிய பின்னர் குடியேற்ற நடைமுறைகள் விரைவாக இருக்கும். அவர் வரிசையில் காத்திருப்பதற்கு பதிலாக அமெரிக்க ஊழியரே முஷாரபுக்காக அந்த பணியைச் செய்வர். இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டது என வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்காவில் இருந்து புறப்படும் போது அவர் வரிசையில் நிற்க வேண்டும். காலணிகள், இடுப்பு பெல்ட்டை கழற்ற வேண்டும். கைகளை மேலே தூக்கியவாறு முழு உடல்பரிசோதனைக்கு உட்பட வேண்டும். அதன்பின்னரே அவர் புறப்படுவதற்கு அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பிரிட்டனும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அவருக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளன
News:Lankasri

0 comments:

Post a Comment