Monday, October 17, 2011

கண்டி மேயர் நியமனம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கைக்கு முரணானது

Best Blogger Tips
முன்னாள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் மகனும், கண்டி பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையின் சகோதரருமான மொஹாந்திர ரத்வத்தை கண்டி மாநகர மேயராக பெயரிடப்பட்டுள்ளார். இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொண்டுள்ள கொள்கைத் தீர்மானத்திற்கு முரணானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகும் ஒருவர் பாராளுமன்றத்தில் அல்லது மாகாண சபையில் உறவினர் ஒருவரை கொண்டிருப்பின் அவர் உள்ளூராட்சி சபையொன்றின் தலைவராக நியமிக்கப் படமாட்டார் என்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேற்கொண்டுள்ள கொள்கைத் தீர்மாணமாகும் என்று தி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கண்டி மாநகர சபைக்கு போட்டியிட்ட மொஹாந்திர ரத்வத்தை அதி கூடிய வாக்குகளைப் பெற்றபோதும் கந்த 28 ஆண்டுகளாக கண்டி மாநகர சபையில் அங்கம் வகிக்கும் சேனா திசாநாயக்க என்பவரை விட 800 வாக்குகளே அதிகமாக பெற்றுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை நடத்திய பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது, உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகும் ஒருவர் அதிகூடிய வாக்குகளை பெற்றபோதும் அவர் பாராளுமன்றத்தில் அல்லது மாகாண சபையில் உறவினர் ஒருவரை கொண்டிருப்பின் அவர் உள்ளூராட்சி சபையொன்றின் தலைவராக நியமிக்கப் படமாட்டார். என்று தாம் கொள்கை தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இது இடம்பெற்றுள்ளது.
மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு தெரிவித்த தகவலில் உதாரணமாக நீர்கொழும்பில் மாகாண சபை அமைச்சர் நிமல் லன்சா அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றபோதும் அவர் நியமிக்கப்படவில்லை வேறொருவர் நியமிக்கபட்டுள்ளார்.
அதேபோன்று அந்தோணி ஜெயவீர பட்டியலில் ஏழாவதாக வந்தபோதும் அவர் 25 ஆண்டுகளாக உள்ளூராட்சி சபையில் சேவையாற்றியமையால் அவர் மேயராக நியமிக்கப் பட்டார் என்று தெரிவித்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அமைச்சர் சரண குணவர்த்தனவின் சகோதரர் கம்பஹா மாநகர சபையின் உயர் பதவிக்கு பெயரிடப்படவில்லை என்பது மற்றுமொரு உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஒரு முஸ்லிம் உறுப்பினரும் .ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன தலா ஒரு உறுப்பினரையும் மொத்தமாக மூன்று முஸ்லிம் உறுப்பினர்களே கண்டி மாநகர சபைக்கு தெரிவாகியுள்ளனர்.
2001ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் தினத்தன்று உடதலவின்னவில் 10 முஸ்லிம் இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் ஐவர் படுகாயங்களுக்குள்ளாகியிருந்தனர். இந்த படுகொலை வழக்கில் முன்னாள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரது மகன்மாரான லொஹான் ரத்வத்தை, சானுகரத்வத்தை ஆகியோர் உட்பட ஐந்து இராணுவத்தினர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அனுருத்த ரத்வத்தையும் அவரது மகன்மார் இருவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டதுடன் இந்த ஐந்து இராணுவ வீரர்களுக்கும் மரண தண்டனையுடன் நூறு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தண்டனைக்கு எதிராக ஐந்து இராணுவ வீரர்களும் உயர்நீதிமன்றத்தில் விசேட மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் கடந்த 2009 ஆண்டு ஜூலை மாதம் உயர்நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் பிரதான எதிரியான அனுருத்த ரத்வத்தைக்கு எதிராக 31 குற்றச்சாட்டுக்களும் அவரது புதல்வர்கள் இருவருக்கும் எதிராக 32 குற்றச்சாட்டுக்களும் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது .
News: Lankamuslim

0 comments:

Post a Comment