Saturday, October 29, 2011

உலக பொருளாதாரத்தை ஸ்திரமானதாக நிறுத்திப்பிடிப்பது ஆசியாவே பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி ராஜபக்ஷ

Best Blogger Tips
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மேற்கு நாடுகள் அதிகளவில் முயற்சிகளை மேற்கொள்ளவில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வதேச ஸ்திரத்தன்மைக்கு ஆசியா முக்கியமானதாக விளங்குவதாகக் கூறியுள்ளார். 
பொதுநலவாய வர்த்தக மாநாடு நேற்று பேர்த்தில் இடம்பெற்றபோது, கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருக்கிறார். வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலைவாய்ப்பின்மை அதிக மட்டத்தில் இருப்பதே வன்முறைகளுக்கு வழிவகுத்திருப்பதாகவும் அந்த குழப்பங்கள் ஏனைய பகுதிகளுக்கும் பரவுவதற்கான அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி எச்சரித்திருக்கிறார். 
தெளிவான முறையில் பொருளாதாரம் தொடர்பான தீர்மானத்தை உருவாக்குவது மிகக் குறைவானதாகவும் மிகக் காலம் தாழ்த்தியதாகவும் உள்ளது. அதுவே இன்றைய பாரிய கவலையாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். நெருக்கடி அதிகரித்து வருவதற்கு பதிலளிப்பதற்கு துரிதமாகவும் ஒன்றுபட்டும் செயற்படுவதே வளர்ச்சியடைந்த பொருளாதாரங்களுக்குத் தேவையானதாகும். இல்லாவிடில் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவிடும். சில சமயங்களில் மீண்டும் திரும்பிவர நிலையாத கட்டத்திற்கும் சென்றுவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார். 
ஐரோப்பிய வலய கடன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான திட்டத்தை கடந்த புதன்கிழமை ஐரோப்பிய தலைவர்கள் மேற்கொண்டுள்ள நிலையில் மேற்கு நாடுகளில் வேலைவாய்ப்பின்மை அதிக மட்டத்தில் இருப்பதற்கு எதிரான நடவடிக்கைகள் தேவையென ராஜபக்ஷ அழைப்புவிடுத்திருக்கிறார். தற்போது வளர்ச்சியடைந்த பல நாடுகள் வேலைவாய்ப்பின்மை அதிக மட்டத்தில் இருக்கும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன. இதன் விளைவாக அரசியல், சமூக குழப்பத் தன்மை அந்த சமூகங்களால் உணரப்படுகின்றதே இதற்கான அறிகுறிகளாகத் தென்படுகின்றது. இத்தகைய நிலைவரங்களைப் பரிசீலனைக்குட்படுத்தாமல் அதிகரித்துச் செல்ல இடமளித்தால் பாரதூரமான அரசியல் பிரச்சினைகள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். அத்தகைய ஒரு நிலமையானது சர்வதேச பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மேலும் அச்சுறுத்தலைத் தோற்றுவித்துவிடுமென்று ஜனாதிபதி கூறியுள்ளார். உலகில் சிக்கலான நிலைமை அதிகரிக்கும் போது சந்தைகளும் பொருளாதாரங்களும் தொடர்ந்தும் நிச்சயமற்ற குழப்பமான நிலமைக்குத் தள்ளப்படும். இந்நிலையில் பூகோள ரீதியில் ஏதோவொரு விதத்தில் ஸ்திரமான பிராந்தியமாக ஆசியா மற்றும் பசுபிக் வலயமே காணப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். 
சர்வதேச ரீதியில் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமான பங்களிப்பை ஆசிய, பசுபிக் பிராந்தியப் பொருளாதாரங்களே வழங்கிவருவது சர்வதேச ரீதியாக இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதே உண்மையாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


News: Thinakural

0 comments:

Post a Comment