Saturday, November 5, 2011

‘இலங்கையில் 36 நிறுவனங்களை தேசியமயமாக்க நடவடிக்கை’

Best Blogger Tips
இலங்கையில் பல தனியார் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை அரசுடமையாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை, புத்த பிக்குகளும், வணிகத்துறை முக்கியஸ்தர்களும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் கண்டித்திருக்கிறார்கள்.
இந்தச் சிக்கலுக்குரிய நிறுவனங்கள் செயற்திறனற்று இருந்தன என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த நடவடிக்கை எதேச்சதிகாரம் கொண்டது என்று கூறுகின்ற அதன் விமர்சகர்கள், சிறந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்த நடவடிக்கை இலங்கையில் இருந்து ஒதுங்கியிருக்கச் செய்யும் என்றும் கூறியுள்ளனர்.
குறைந்த செயற்திறன் உள்ள நிறுவனங்கள் மற்றும் சரியாக பயன்படுத்தப்படாத சொத்துக்களை மீளப்பெறுதலுக்கான இந்தச் சட்டம் பற்றி அரசாங்க ஊடகங்கள் எதுவும் கூறவில்லை.
ஆனால், இந்தச் சட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்துக்கு வரவிருக்கிறது. அது மாத்திரமல்லாமல், அந்த சட்டத்தின் அடிப்படையில், சரியாக செயற்படவில்லை என்று கூறப்படுகின்ற 36 வணிகங்கள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும்.
இதில் கொழும்பின் முக்கிய ஹொட்டல்களில் ஒன்றான ஹில்டன் ஹொட்டலை வைத்திருக்கும் நிறுவனமும், நகரின் முக்கியமான காணிகளை தம்வசம் வைத்திருக்கும் ஒரு நிறுவனமும் அடங்குகின்றன.
இவற்றில் குறைந்தபட்சம் ஒரு நிறுவனம் எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கு சொந்தமானதாகும்.
வழக்கமாக இலங்கையில் புத்த பிக்குமார் அரசாங்கத்தின் நம்பகமான ஆதரவாளர்கள்.
ஆனால், குறைந்தபட்சம் 2 பிக்குகளும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒருமுன்னாள் வணிக அதிகாரியும் இதனைக் கண்டித்திருக்கிறார்கள்.
எதிராளிகளிடம் இருந்து சொத்துக்களை அரசாங்கம் சுவீகரிக்க விளைவதாகவும், அவற்றை தமது விசுவாசிகளுக்கு கொடுக்கப் போவதாகவும், இது எதிர்காலத்தில் மேலும் தேசியமயமாக்கலுக்கு வழி செய்யும் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது பௌத்த படிப்பினைகளுக்கு புறம்பானது என்றும், வணிக சமூகத்தை இது அச்சத்துக்குள்ளாக்கும் என்றும் ஒரு பிக்கு கூறியுள்ளார்.
இந்தச் சட்டம் ரகசியமாக உருவாக்கப்பட்டதாகவும், அவசர விடயமாக அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட பிறகு, அதற்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
செயற்திறன் குறைந்த நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்துவதால், மக்களின் நலனை முன்னிட்டு 1950 ஆம் ஆண்டு முதலே இலங்கை அரசாங்கங்கள் விரிவுபட்ட தேசியமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாலும், இந்த சட்டம் முக்கியமானது என்று அரசாங்கம் கூறுகிறது.
சில அரசாங்கங்கள் இதற்கு மாறாக தனியார் மயமாக்கலையும் செய்தன.
ஆனால், ராஜபக்ஷ அரசாங்கம் தனியார் மயப்படுத்தலை நிறுத்தி வைத்திருப்பதுடன், கடந்த வருடம் ஷெல் பெட்ரோலியம் நிறுவனத்தின் சிறிலாங்கா பிரிவை மீண்டும் அரசுடமையாக்கியது. இன்னும் பல அரச தொழில் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன.

0 comments:

Post a Comment