முஸ்லிம்கள் தமது இறைவனால் வழங்கப்பட்ட இரண்டு பெருநாட்களில் ஒன்றான ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகிறார்கள். நோன்புப் பெருநாள்; நோன்பு என்ற பெரும் கடமை முடிவடைந்த பின்னரும் ஹஜ்ஜுப் பெருநாள், ஹஜ் எனும் முஸ்லிம்களது சர்வதேச மாநாடு நடைபெற்று முடிந்த பின்னரும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இவ்விரு கடமைகளையும் தமக்குத் தந்தமைக்கு நன்றி செலுத்துமுகமாகவும் அக்கடமைகள் தரும் பயன்களையும் அடைந்து கொண்ட களிப்பின் விளைவாகவும் இவ்விரு பெருநாட்களையும் முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள்.
உண்மையில் ஹஜ் என்பது மாபெரும் தத்துவங்களையும் பின்னணிகளையும் இதர நலன்களையும் தன்னகத்தே கொண்ட அற்புதமான ஒரு கடமை என்பதை எவரும் ஏற்க வேண்டியிருக்கிறது. உலகின் எந்தவொரு மூலை முடுக்கிலும் ஒரு முஸ்லிம் வாழ்ந்த போதும் அவனிடம் அல்லாஹ் மக்கமா நகருக்குச் சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான பண வசதியும் உடல் வலுவும், பாதுகாப்பும் இருக்குமாயின் அவன் வாழ்வில் ஒரு தடவையாவது ஹஜ்ஜை நிறைவேற்றுவது கடமை என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். உலகில் பல கோடிப் பள்ளிவாசல்கள் இருந்தும் அவற்றுக்கு மத்தியில் ஹஜ் யாத்திரைக்காக தற்போது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமுக்கும் அதனை அண்டியுள்ள மினா, முஸ்தலிபா, அரபா போன்ற பகுதிகளுக்கும் மட்டுமே சென்று அக்கடமையை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை வந்திருப்பதற்கு நியாயமான காரணம் இருக்கிறது.
உலகின் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள இரண்டு பள்ளிகளை மையப்படுத்தியோ அல்லது பல பள்ளிகளை மையப்படுத்தியோ ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றலாம் என்ற அனுமதியில்லை. மாறாக மஸ்ஜிதுல் ஹராம் மட்டுமே இதற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு ‘அரபா’ எனப்படும் பெருவெளியில் ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வேளையில் தங்கியாகவேண்டும். அவர்களது தொகை லட்சக்கணக்காக இருப்பினும் சரியே. இதன் மூலம் முஸ்லிம் சமூகம் ஐக்கியப்பட வேண்டும் என்பதே அல்லாஹ்வினதும் அவன் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களதும் குறிக்கோளாக உள்ளது. ஒரு பள்ளியையும் அரபா பெருவெளியையும் மினா, முஸ்தலிபா போன்ற புனிதத் தலங்களையும் ஹஜ்ஜுக் கடமைக்காக வரையறுத்திருப்பது இதற்காகத்தான். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதும் கிரியைகளைச் செய்வதும் பல சிரமங்களைத் தரலாம்.
ஆனால் அல்லாஹ்வின் அருளையும் கூலியையும் பெற வேண்டுமாயின் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமாயின் இந்த சிரமங்களைத் தாங்குவது அவசியமாகும். சனநெரிசலால் மரணங்கள், காயங்கள், நோய்கள், சிரமங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் ஐக்கியத்தை இறை கூலியை அடைவதற்கு அதுதான் வழியென்றால் அது பொறுமையாகச் செய்யப்பட வேண்டும். ஹஜ் கடமைக்காக உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பலதரப்பட்ட முஸ்லிம்கள் வருகை தருகிறார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர், வயோதிபர், அரபிகள், அஜமிகள், வெள்ளையர், கறுப்பர், அரசன், ஆண்டி, படித்தவர், பாமரர் என்று எதிரும் புதிருமான நிலைகளில் இருப்பவர்கள் தோளோடு தோள் நின்று எல்லாவிதமான வேறுபாடுகளையும் மறந்து அணியணியாக நின்று தாம் அல்லாஹ்வின் அடியார்கள் மனிதர்கள் என்ற ஒரே தாரக மந்திரத்தை மட்டுமே மையப்படுத்தி அக்கடமைகளில் ஈடுபடுகிறார்கள்.
உலகில் இஸ்லாம் அடைய விரும்பும் குறிக்கோள்களில் பிரதானமானதாக ஐக்கியம் அமைந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இஸ்லாத்தின் சுலோக வாசகமாகும். மொழி, நிற, பிரதேச, குல, இயல்பு வித்தியாசங்கள் அல்லாஹ் இருப்பதைக் காட்டும் அத்தாட்சிகளாகும்.
‘வானங்கள் பூமியைப் படைத்திருப்பதும் உங்களது மொழிகளும் நிறங்களும் வித்தியாசப்பட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் சிலவாகும். இவ்விடத்தில் அறிஞர்களுக்குப் பல அத்தாட்சிகள் உள்ளன’ (30:22) என அல்லாஹ் குறிப்பிடுகிறான். அந்த வகையில் பன்மைத்துவம் என்பது ஒரு பீடையல்ல. அது உலக வாழ்வின் நியதியாகும். இறைவனின் ஏற்பாடாகும். பணம், அழகு, அறிவு, அதிகாரம், உயர்குலம் என்பவற்றை வைத்து பெருமைப்பட வேண்டியது அவசியமில்லை.
அவ்வாறு பெருமைப்படுவதும் மாச்சர்யங்களை உருவாக்குவதும் பாவச் செயலாகும். இறை சக்தி (தக்வா), நற்பண்புகள் (அஹ்லாக்) என்பவை மாத்திரமே ஒரு மனிதனுக்குப் பெருமை சேர்க்குமே தவிர அவன் பிறந்த குலமோ, பிரதேசமோ, அவன் பேசும் மொழியோ அவனது தோலின் நிறமோ அவன் வைத்திருக்கும் பணமோ, அதிகாரமோ அல்ல. ‘யாரது செயல்கள் ஒருவனை தாமதப்படுத்திவிட்டதோ அவனது குடும்ப கெளரவம் அவனை துரிதப்படுத்திவிடமாட்டது’ (ஹதீஸ் : ஸஹீஹ் முஸ்லிம்) என முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment