Sunday, May 8, 2011

சட்டவிரோத ஆட்கடத்தல் வருமானம் மூலம் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்ட முயன்றவர் கைது

Best Blogger Tips

சட்டவிரோத ஆட்கடத்தல்  மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளச் செயற்படுத்த முற்பட்ட நபரொருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட பொலிஸ் புலனாய்வுக்குழுவொன்றுக்குக் கிடைத்த ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் வவுனியாவில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுக் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அத்துடன் பிரஸ்தாப சந்தேக நபர் வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தப்பிவந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை பாதுகாப்புப் படையினரின் கையில் சிக்கவிடாமல் பாதுகாப்பளித்திருப்பது மாத்திரமன்றி, மீன்பிடி வள்ளங்கள் மூலமாக திருட்டுத்தனமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறித்தும் தகவல்கள் கிடைத்திருப்பதாக குற்றப்புலனாய்வுப் பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தெரிவித்திருந்தனர்.
அதற்கு மேலதிகமாக பொதுமக்களை சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டிருந்த பிரஸ்தாப சந்தேக நபர், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உயிரூட்ட முயன்றதாகவும் விசாரணைகளின் போது ஒப்புக் கொண்டுள்ளார்.
அவரிடம் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியம் குறித்து குற்றப் புலனாய்வு பொலிசார் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவருக்கு எதிராக மூன்றுமாத கால தடுப்புக்காவல் உத்தரவு வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment