டாக்டர்களின் அலட்சியத்தால், ஷேர் ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே பால்ராம்பட்டு பகுதியில் வசிப்பவர் சாமுண்டி(39). செங்கல் அறுக்கும் தொழிலாளி. இவருக்கு முத்தாலம்மாள்(29) என்ற மனைவியும், சசிகலா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
நிறைமாத கர்ப்பிணியான முத்தாலம்மாளுக்கு இரவு தினம் பிரசவ வலி ஏற்பட்டது. அவரது கணவர் சாமுண்டி, மாமியார் சின்னம்மாள், உறவினர் சோலைமுத்து ஆகியோர் முத்தாலம்மாளை பஸ்சில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பேறுகாலத்துக்கு இன்னும் நாளாகும் என்று கூறி அனுப்பிவிட்டனர். காலை 7.30 மணியளவில் ஷேர்ஆட்டோவில் பஸ் நிலையத்துக்கு வந்தனர்.
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை அருகே வேகத்தடையில் ஷேர் ஆட்டோ ஏறி இறங்கியபோது முத்தாலம்மாளுக்கு அங்கேயே பிரசவம் ஏற்பட்டது. அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில் அவர் கூச்சல் போடவே டிரைவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். தொப்புள்கொடி அறுக்காத நிலையில் தாயும், குழந்தையும் நடுரோட்டில் கிடப்பது குறித்து ஜிப்மர் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் எந்த ஆம்புலன்சும் வரவில்லை.
இதற்கிடையே அவ்வழியாக வந்த போலீஸ்காரர்கள் ஆர்த்திஷோன், வேல்முருகன், வினோத் ஆகியோர் சம்பவத்தை பார்த்ததும் வண்டியை நிறுத்தினர். ஜிப்மர் மருத்துவமனையை போனில் தொடர்பு கொண்டு, தாங்கள் போலீசார் பேசுவதாகவும், தொழிற்பேட்டையில் நடுரோட்டில் பிரசவம் நடந்து தாயுடன் குழந்தை உயிருக்கு போராடுவதாகவும், டாக்டர்கள் யாரேனும் உதவிக்கு வருமாறு கூறினர்.
அதற்கு பதிலளித்த பெண் டாக்டர், இங்கிருந்து யாரும் அங்கு வரமுடியாது. ஆம்புலன்ஸ் டிரைவர் யாரும் இல்லை. நீங்களே ஆட்டோ பிடித்து அவரை கொண்டு வாருங்கள் என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார். அதிர்ச்சியில் உறைந்த போலீசார், தனியார் ஆம்புலன்சை அழைத்து வந்து, தாயையும், குழந்தையையும் ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அந்த வண்டியும் பெட்ரோல் இல்லாமல் பாதியில் நின்றது. அதன்பிறகு மாற்று தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நடந்த சம்பவத்தை பத்திரிகையாளர்கள் விசாரிப்பதை பார்த்ததும் டாக்டரும், நர்சும் அவசரம் அவசரமாக ஓடிவந்தனர். ஆம்புலன்சில் படுத்திருந்த தாயிடமிருந்து தொப்புள் கொடியை துண்டித்து குழந்தையை பிரித்தனர். மருத்துவமனையில் தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News:Yarlmuslim




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment