Monday, October 17, 2011

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்க படைகள் குவிப்பு

Best Blogger Tips
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான பீரங்கிகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தானுக்கும், ஆப்கனுக்கும் இடையிலான அனைத்துப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு, எல்லைகள் மூடப்பட்டு விட்டன.

பழங்குடியினப் பகுதிகள்: பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை ஒட்டி, ஏழு பழங்குடியினப் பகுதிகள் உள்ளன. அவற்றில் தான் தெற்கு, வடக்கு வஜீரிஸ்தான் பகுதிகள் உள்ளன. பாகிஸ்தான் அரசியலமைப்புப்படி, ஏழு பகுதிகளும் பழங்குடியினரால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பகுதிகள். வடக்கு வஜீரிஸ்தானின் தலைநகர் மிரான்ஷா நகர்.

அமெரிக்கா குற்றச்சாட்டு: பாக்., ஆப்கன் எல்லையில் பழங்குடியினப் பகுதிகள் இருப்பதால், தலிபான்கள் மிகச் சுலபமாக பாகிஸ்தானுக்குள் நுழைகின்றனர். ஹக்கானி குழுவின் பதுங்கிடமாக வடக்கு வஜீரிஸ்தான் இருப்பதாக, அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. வஜீரிஸ்தான் அருகிலுள்ள பழங்குடியினப் பகுதிகள் சிலவற்றில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள், பயங்கரவாதிகளின் முகாம்கள் மீதான குண்டுவீச்சில், பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளன.

கோரிக்கை: இந்நிலையில், வடக்கு வஜீரிஸ்தான் பகுதியில் குண்டு வீச்சை மேலும் அதிகரிப்பதன் மூலம், ஹக்கானி குழுவை ஒழித்துக் கட்ட முடியும் என அமெரிக்கா கூறி வந்தது. ஆனால், பாகிஸ்தான் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. சமீபத்தில், இருதரப்புக்கும் ஏற்பட்ட ஹக்கானி குழு தொடர்பான விவகாரத்தில், ஹக்கானி குழு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என, பாக்., திட்டவட்டமாகத் தெரிவித்தது.

கண்டுகொள்ளாத அமெரிக்கா: ஆனால், கடந்த செப்டம்பர் 29ம் தேதி வாஷிங்டனில் நடந்த தேசிய பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில், அதிபர் ஒபாமா, வடக்கு வஜீரிஸ்தானில் தாக்குதல் நடத்துவதன் மூலம், ஹக்கானி குழுவை ஒழித்தே தீர வேண்டும் என உறுதியாகத் தெரிவித்தார். "வடக்கு வஜீரிஸ்தானில் அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துமானால், பாக்., சும்மா இருக்காது' என்ற பிரதமர் கிலானியின் எச்சரிக்கையை, அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை

எல்லையில் ராணுவம்: இந்நிலையில் தான், கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில், வடக்கு வஜீரிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும், அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வடக்கு வஜீரீஸ்தானின், குலாம் கான் பகுதியைச் சேர்ந்தவர்கள், "நேட்டோ' விமானங்கள் தங்கள் பகுதி மீது பறப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு: வடக்கு வஜீரிஸ்தான் மற்றும் ஆப்கனின் கோஸ்ட் மாகாணம் இடையிலான அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன. எல்லைச் சாவடிகள் மூடப்பட்டு விட்டன. கோஸ்ட் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாக தேடுதல் வேட்டை: போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், குலாம் கான் பகுதிச் சாலையில் 900 சரக்கு லாரிகள் தேங்கி நிற்பதாக, மிரான்ஷாவில் உள்ள பாக்., அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு அமெரிக்க ராணுவ வீரர்கள், வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எனினும், யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. வடக்கு வஜீரிஸ்தான் மக்கள், தங்கள் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நுழையக் கூடும் என, பீதியில் உள்ளனர். அமெரிக்கப் படைகள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதை பாக்., அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால், அமெரிக்க தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

எத்தனை பேர் பலி? : கடந்த 2004, ஜூன் 17ம் தேதியில் இருந்து இதுவரை, பழங்குடியினப் பகுதிகள் மற்றும் வஜீரிஸ்தானில் மட்டும், 300 முறை அமெரிக்க விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளன. இவற்றில், ஒபாமா ஆட்சியில் மட்டும் 248 தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இதில் இதுவரை, மொத்தம் 2,318ல் இருந்து, 2,912 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில், 173 குழந்தைகள் உட்பட, 775 அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். 1,141 முதல் 1,225 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
News: Yarlmuslim

0 comments:

Post a Comment