Sunday, October 9, 2011

பாரதவுக்கு இறுதியஞ்சலி செலுத்தச் சென்ற ஜனாதிபதிக்கு எதிர்ப்பு

Best Blogger Tips
படுகொலைச் செய்யப்பட்ட பாரத லக்ஷ்மணின் சடலத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற ஜனாதிபதி மஹிந்தவுக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் ஆவேசமான எதிர்க்கருத்துக்களை அடுத்து பாதுகாப்புத் தரப்பின் தலையிட்டு அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர். அதன் காரணமாக பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திரவின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி, பாரதவின் குடும்பத்தவர் எவருடனும் உரையாடாத நிலையில் அங்கிருந்து அவசரமாகப் புறப்பட்டு வந்துள்ளார்


அதேபோன்று பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திரவின் சடலம் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு சென்றிருந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பாரதவின் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரத்துடன் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
அதன் காரணமாக நாமல் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை பாரத லக்ஷ்மணின் படுகொலைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே முழுப்பொறுப்பேற்க வேண்டுமென கொலன்னாவை மக்கள் பெரும்பான்மையாக கருத்து வெளியிட்டுள்ளதுடன், பாரதவின் கொலையாளிகளுக்கு எதிராக தேங்காய் உடைப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபைக்கான வாக்களிப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே மாலை 3.40 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு நிலையத்துக்கு முன்பாக இருதரப்பினரும் நேருக்குநேர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் எமக்குத் தெரிவித்தனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் அங்கொடை மொரகஸ் சந்தியில் பொலிஸாரின் வாகனத்துடன் அரசியல் பிரமுகர் ஒருவரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
அவ்விடத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினர். இளைஞர்கள் சிலர் அங்கிருந்த பொலிஸாரைத் தாக்குவதற்கு முயற்சித்த வேளை பொலிஸார் பின்வாங்கினர்.
செய்தி சேகரிப்பதற்காக அவ்விடத்திலிருந்த ஊடகவியலாளர்களை நோக்கி வந்த சிலர் “எங்களுடைய அரசாங்கம், நாங்கள் நினைத்ததைச் செய்வோம். யார் எங்களைப் படம் எடுக்கச் சொன்னது” எனக் கேட்டுக்கொண்டே ஊடகவியலாளர்களைத் தாக்குவதற்கு முயற்சித்தனர்.
ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்த வாகனத்தில் அங்கொடை பகுதியூடாக பயணித்த போது அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் வீடும், அலுவலகமும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.
உடனடியாக அவ்விடத்துக்கு வந்த அதிரடிப்படையினர் பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியெங்கும் பதற்றமாகக் காணப்படுவதுடன் மீண்டும் கலவரம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில் முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்து.
பொலிஸார் உட்பட விசேட இராணுவ படைப்பிரிவினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment