Saturday, November 5, 2011

“இராணுவ மூலோபாயம் குறித்து எனக்குப் புத்தி சொல்ல வேண்டாம்“ - ரணில் மீது எரிந்து விழுகிறார் கோத்தாபய

Best Blogger Tips
போருக்குப் பிந்திய இராணுவ மூலோபாயம் குறித்து ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனக்குப் புத்திமதி சொல்லத் தேவையில்லை என்றும், அவரது ஆலாசனை தனக்குத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. 

நோர்வேயின் நடுநிலையுடனான போர்நிறுத்த உடன்பாட்டையும், போர் முயற்சிகளையும் மோசமாக கையாண்ட ஐதேக தலைவர், இராணுவ மற்றும் ,வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக தீவிரமாக எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கோபத்துடன் கூறியுள்ளார். 

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து பொதுமக்களின் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்த கருத்து தொடர்பாக பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

போருக்குப் பிந்திய அபிவிருத்தித் திட்டங்கள், விருத்தியடைந்துள்ள சுற்றுலாத்துறை, மற்றும் முதலீடுகள், தீவிரவாத தாக்குதல் அச்சமின்றி வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் - இவையெல்லாம் ரணில் விக்கிரமசிங்கவின் கண்களுக்குத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

“சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியாக ஐதேக இருந்தாலும், போருக்கு ஆதரவு வழங்கவில்லை. இராணுவ வழிமுறையின் மூலம் விடுதலைப் புலிகளை மண்டியிடச் செய்ய முடியும் என்று ஐதேக நம்பவில்லை.“ என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். 

“நான்காவது கட்ட ஈழப்போர் நடந்த காலத்திலோ அல்லது போருக்குப் பின்னரோ, இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து ஐதேகவினாலோ அல்லது தன்னாலோ வெளியிடப்பட்ட எந்தவொரு அறிக்கையாவது ரணில் விக்கிரமசிங்கவினால் காட்ட முடியுமா?“ என்றும் கோத்தாபய ராஜபக்ச சலால் விடுத்துள்ளார். 

“தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடாமல், பொறுப்புக்கூறும் விவகாரம் தொடர்பாக ஐதேகவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியுமா?“ என்றும் அவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சவால் விடுத்துள்ளார். 

ஐதேகவின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் தமது மரபுவழி போர்ப்பலத்தை அதிகரித்துக் கொண்ட விபரங்கள் வெளியாகி விடும் என்று ரணில் விக்கிரமசிங்க அச்சம் கொண்டுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

“கப்பல் கப்பலாக புலிகள் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும், கருவிகளையும் கொண்டு வந்து இறக்கிய போது ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆலோசகர்களும் எங்கே போயினர்? 

இராணுவ விவகாரங்களில் ஐதேகவின் வழிகாட்டல் போன்று முட்டாள்தனமாக நாம் இருக்கமுடியாது. 

நந்திக்கடலோரத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதையை முடித்து விட்டோம். 12,000 புலிகளை கைது செய்தோம். பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிபொருட்கள், கருவிகளைக் கைப்பற்றினோம். 

பிரபாகரனுக்குப் பின்னர் பொறுப்பேற்ற குமரன் பத்மநாதனைக் கைது செய்து புலிகளின் ஒரு கப்பலையும் கைப்பற்றியுள்ளோம். 
நாம் இவற்றையெல்லாம் சாதித்துள்ள நிலையிலும், அனைத்துலக சமூகத்தின் ஒருபகுதி புலிகளின பின்னால் நிற்கிறது. 

போருக்கு ஆதரவளிக்காத ரணில் விக்கிரமசிங்கவும், அவரது கட்சியும் எப்போதும் எமது முயற்சிகளைக் குறைத்தே மதிப்பிடுகின்றனர். கேலி செய்கின்றனர். 

1990இல் இரண்டாவது கட்ட ஈழப்போர் தொடங்குவதற்கு முன்னர் ஐதேக நிர்வாகத்தில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நிதி குறித்து அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். 

நோர்வேயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புலிகளின் வானொலிக்கான கருவிகளுக்கு செலுத்தப்பட்ட சுங்கத்தீர்வை உள்ளிட்ட சில பரிமாற்றங்கள் குறித்த ஆவண சாட்சியங்கள் அரசாங்கத்திடம் உள்ளன. 

போரின்போது நடந்து கொண்ட விதம் காரணமாக, பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறும் உரிமையை ஐதேக இழந்து விட்டது“ என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment