Thursday, November 3, 2011

முஹம்மது நபியை கார்டூன் வரைந்த பத்திரிகை அலுவலகத்திற்கு தாக்குதல்

Best Blogger Tips
முகமது நபியின் கார்டூன் சித்திரம் ஒன்றை முன்-அட்டையில் வெளியிட்ட பிரான்ஸிலுள்ள அரசியல் நையாண்டி சஞ்சிகையான ஷார்லி எப்தோவின் அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடந்துள்ள அதேவேளைசம்பவத்தை அந்நாட்டுப் பிரதமர் பிரான்ஸுவா பியோன் கண்டித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் என்பது பிரான்ஸ் ஜனநாயகத்தில் பறிக்கப்பட முடியாத உரிமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் பிரான்ஸுவா ஃபியோன், இவ்வாறான வன்முறைகளை நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

முகம்மது நபிகள் பத்திரிகையாசிரியராக இருந்து உருவாக்கியதுபோன்ற கற்பனையில் சிறப்பு பதிப்பொன்றை இந்த சஞ்சிகை வெளியிட்டிருந்தது ஷரியா சட்டங்களையும், துனிஷியா மற்றும் லிபியாவில் அண்மையில் கிளர்ச்சியாளர்களின் வெற்றியீட்டியதையும் இந்த சஞ்சிகை நையாண்டி செய்திருந்தது.

ஷார்லி எப்தோ பத்திரிகையின் அலுவலகங்களுக்கு தீவைத்தது இஸ்லாமியவாத கிளர்ச்சிக்காரர்கள்தான் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. பிரான்ஸிலும் ஐரோப்பாவின் வேறு பல இடங்களிலும் கடும்போக்கு இஸ்லாத்துக்கும் பேச்சு சுதந்திரத்துக்கும் இடையில் நீடித்துவருகின்ற பதற்றத்தை எடுத்துக்காட்டுவதாக இந்த விவகாரம் அமைந்துள்ளது. ஐந்து கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழும் இடமாக ஐரோப்பா இருக்கிறது. ஆனால் சில இஸ்லாமிய பழக்கங்களும் நம்பிக்கைகளும் பேச்சு சுதந்திரம் ஊடக சுதந்திரம் போன்றவை மேற்குலக பாரம்பரியத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற விதத்துடன் எந்நாளுமே பொருந்திப்போக முடியுமா என்ற கேள்வி செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் வலுப்பெற்றுவருகிறது.

குரானில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கவில்லை என்றாலும், முகமது நபியை எந்த வகையில் வரைந்து காண்பிப்பதென்பதும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு விஷயமாகவே நூற்றாண்டுகள் காலமாக முஸ்லிம்கள் நம்பிவருகிறனர்.

முகமது நபியை சித்திரமாகக் காட்ட இடம்தந்தால், அது உருவ வழிபாட்டுக்கு வழிவகுத்துவிடும் என்று முஸ்லிம்கள் கருதுகின்றனர். முகமது நபியின் கேலிச் சித்திரம் டென்மார்க்கில் 2005லும் 2006லும் பிரசுரிக்கப்பட்டபோது, தங்களது மத நம்பிக்கை கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்படுவதாக முஸ்லிம்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

வெடிகுண்டு தலைப்பாகை அணிந்தவராக முகமது நபியைக் சித்தரித்து, அதன் மூலம் பயங்கரவாதத்தை இஸ்லாத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்திய குறிப்பிட்ட ஒரு கார்டூனால் முஸ்லிம்கள் மிகவும் கொதித்துப்போனார்கள். ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் தாக்கப்பட்டிருந்தன. கொலை மிரட்டல்கள் வர கேலிச் சித்திர ஓவியர்கள் சிலர் தலைமறைவாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருந்தது.

0 comments:

Post a Comment